சேலம்: நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-வது ஆண்டு விழாவையொட்டி, சேலம் மாவட்ட தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் சேலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சேலம் அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் இருந்து தொடங்கிய பேரணியை, ஆட்சியர் கார்மேகம், சேலம் முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் இருவரும் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். இதில், எமதர்மன் வேடமணிந்திருந்த நாடகக் கலைஞர்கள், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு ஆட்சியர் மற்றும் நீதிபதி உள்ளிட்டோர் மலர்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நடுவர்கள், சேலம் சரக துணை போக்குவரத்து ஆணையர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago