சேலம் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரத் திட்டப்பணிகள் இந்தாண்டு நிறைவடையும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், சேலம் ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 80 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 46 பணிகள் ரூ.273.69 கோடியில் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 34 பணிகள் ரூ.672.86 கோடியில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
ஏற்கெனவே தமிழக முதல்வரின் மாவட்டமாக சேலம் இருந்துள்ளது.எனவே, இங்கு ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தொய்வின்றி நடத்தி, அதனை விட சிறப்பாக நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயோ மைனிங் முறையில் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டத்தை செயல்படுத்துகிறோம்.
சேலத்தில் நாளொன்றுக்கு 129 எம்எல்டி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதில் கழிவு நீராக வரக்கூடிய 80 எம்எல்டி. நீரை சுத்திகரிக்கும் திட்டம் உள்ளது.
பேரூராட்சிகளில் கழிவு நீரை டேங்கர் லாரிகளில் உறிஞ்சிச் சென்று, அதனை காயவைத்து, கழிவுகளை உரமாக்கும் திட்டம் உள்ளது. சேலம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவழையின்போது, பாதிக்கப்படக்கூடியதாக 36 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு உரிய ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஆய்வுக் கூட்டத்தின்போது, பல்வேறு துறைகள் சார்பில் ரூ.27.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 67 பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்
கூட்டத்தில், எம்பி-க்கள் பார்த்திபன், சின்ராஜ், எம்எல்ஏ-க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், கூடுதல் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், எஸ்பி அபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago