நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், கீழ்வேளூர் காவிரி டெல்டா பாசன அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு நலச் சங்க துணைச் செயலாளர் பிரபாகரன் பேசியது: தற்காலிக ஒப்பந்த அதிகாரிகளைக் கொண்டு அறுவடை கணக்கீடு செய்யப்படுவதால், கணக்கீடு செய்வதிலும், பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்குவதிலும் தவறுகள் நேரிடுகின்றன. இதைத் தவிர்க்க வேளாண்மை துறை அதிகாரிகள் மூலமாக மறு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்க் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றார்.

நாகை வட்டம் பாலையூர் தமிழ்ச்செல்வன் பேசியபோது, “சம்பா சாகுபடிக்கு தேவையான அனைத்து உரங்களும் உரிய காலத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பன்னீர்செல்வம் பேசியது: மாவட்டத்தில் நடப்பாண்டு இது வரை 1,39,933 ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 67,439 ஏக்கர் சாகுபடிக்கு மட்டுமே விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ.15-ம் தேதி கடைசி நாளாகும். எனவே, மீதியுள்ள பயிர்களுக்கு விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்து பயன்பெறலாம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE