குமரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் : ஆறுகளில் வெள்ளம், அணைகள் நிரம்பின

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேறினர். பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதிகபட்சமாக கன்னிமாரில் 95 மிமீ மழை பெய்திருந்தது. சுருளகோட்டில் 71 மிமீ,பூதப்பாண்டியில் 43, சிற்றாறு ஒன்றில் 52, களியலில் 50,கொட்டாரத்தில் 15, குழித்துறையில் 39, மயிலாடியில் 42, நாகர்கோவிலில் 54, பேச்சிப்பாறையில் 50, பெருஞ்சாணியில் 60, புத்தன்அணையில் 58, சிவலோகத்தில் 54, தக்கலையில் 20, பாலமோரில் 38,மாம்பழத்துறையாறில் 41, ஆரல்வாய்மொழியில் 32, கோழிப்போர்விளையில் 33, அடையாமடையில் 57, குருந்தன்கோட்டில் 35, முள்ளங்கினாவிளையில் 31, ஆனைக்கிடங்கில் 40, முக்கடல் அணையில் 32 மிமீ மழை பதிவாகியிருந்தது.

பேச்சிப்பாறை நீர்மட்டம் 43.62 அடியாக உள்ள நிலையில், அணைக்கு விநாடிக்கு 1,360 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,635 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.51 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 1,093 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் நிரம்பின.

மலை கிராமங்களான மோதிரமலை, குற்றியாறு, கீரிப்பாறை பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மக்கள் சிரமம் அடைந்தனர். குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்தது. வள்ளியாறு, பழையாறு உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரள்கிறது.

நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம் பகுதிகளில் நேற்று மழையால் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வந்த மக்கள் சிரமமடைந்தனர். ரப்பர் பால்வெட்டும் பணி, மீன்பிடி தொழில், தென்னை சார்ந்த தொழில், கட்டிட பணிகள் பாதிக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE