சரவெடி மற்றும் பேரியம் கலந்த : பட்டாசு தயாரிக்க, வெடிக்க தடை : தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் சரவெடி மற்றும் பேரியம் கலந்த பட்டாசுகளைத் தயாரிக்கவும், வெடிக்கவும் தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பட்டாசு உற்பத்தி மற்றும் வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், கடந்த 29-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

ரசாயனம் கலந்த பட்டாசு

அந்த தீர்ப்பில், "தீபாவளிப் பண்டிகை மற்றும் இன்னபிற நிகழ்வுகளின்போது சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டுக்கு எந்தவிதமான தடையும் இல்லை.

ஆனால், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய, பேரியம் என்ற ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசு கள் மற்றும் சரவெடிகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை விதிக்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.

குற்றவியல் நடவடிக்கை

இந்த தீர்ப்பை முழுமையாக செயல்படுத்தும் வகையில், தமிழக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள், சரவெடி மற்றும் பேரியம் கலந்த பட்டாசுகளை தயாரிக்க தடை விதிக்கப்படுகிறது.

மேலும், இவ்வகை பட்டாசு களை சேமித்து வைக்கவும், கொண்டுசெல்லவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளை பொதுமக்கள் வெடிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கூறிய உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர்மீது, அரசு விதிகளின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE