திருவாரூர்: திருவாரூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சிஐடியு அறிவித்திருந்தது. இதையடுத்து, திருவாரூர் வட்டாட்சியர் தலைமையில் நேற்று முன்தினம் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், தூய்மைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.ராஜேந்திரன் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். நகராட்சி தரப்பில் நகராட்சி மேலாளர், சுகாதார ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், நகர காவல் ஆய்வாளர் மற்றும் ஒப்பந்ததாரர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும். தமிழக அரசு அறிவித்த 3 மாத கரோனா சிறப்பு ஊதியம் வழங்கப்படும். இதுவரை வழங்கி வந்த தினக்கூலி ரூ.270-க்குப் பதிலாக அக்.1-ம் தேதி முதல் கணக்கிட்டு ரூ.491 என வழங்கப்படும். நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட உத்தரவாதம் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்டதையடுத்து, முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago