திருவாரூர் மாவட்டத்தில் 212 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு வசிப்பவர்களை வடகிழக்கு பருவமழை இடர்பாடுகளின்போது தங்க வைப்பதற்காக 249 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் கமலாலயக் குளத்தின் தென்கரை சுற்றுச்சுவர் மழை காரணமாக அண்மையில் இடிந்து விழுந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதையொட்டி, கமலாலயக் குளத்தின் கரைகள் மேலும் பாதிப்படைந்து வருவதையும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலுக்குட்பட்ட கமலாலயக் குளத்தின் தென்கரை, தற்போது தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பாதிப்படைந்து வருகிறது. கரைகள் மேலும் உடையாமல் இருக்க தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில், நிரந்தர தீர்வு காணப்படும். வடகிழக்கு பருவமழையின்போது, மாவட்டத்தில் பாதிக்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே ஆய்வுசெய்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
212 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்குள்ள பொதுமக்களை இடர்பாடான காலத்தில் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வந்து, தங்க வைப்பதற்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய 249 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணியாளர்களின் மூலம் வடிகால், வாய்க்கால்களில் தேங்கியுள்ள செடி, கொடிகளை அகற்றுதல், தூர் வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் 3,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட்டு, தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின்போது, கோட்டாட்சியர் பாலச்சந்திரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago