ரூ.77.93 லட்சத்தில் 125 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல் :

By செய்திப்பிரிவு

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத் துறை வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாநில சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் அருண் தம்புராஜ், எம்.பி எம்.செல்வராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கவுதமன், எம்எல்ஏக்கள் நாகை மாலி, முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் பேசியது: மக்களுக்கு தரமான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். மக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வுகாண வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழை காலங்களில் தேங்கும் கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழையை முன்னிட்டு, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரால் மக்கள் பாதிக்காத வகையில் அவர்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கான இடங்களும் தயார் நிலையில் உள்ளன. நீச்சல் பயிற்சி பெற்ற முன்கள மீட்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

பின்னர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய்த் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் 125 பயனாளிகளுக்கு ரூ.77.94 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து, நாகை புதிய கடற்கரையை மேம்படுத்துவது தொடர்பாக அங்கு சென்று ஆய்வு செய்தார்.

நாகை மாவட்டம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள புனரமைப்பு செய்யப்பட்ட மகாத்மா காந்தி மண்டபத்தை அமைச்சர் திறந்துவைத்து, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாகை மாவட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள காளான் விதை உற்பத்தி ஆய்வு கூடத்தையும் அவர் ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்