தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக பக்கவாத நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜி.ரவிக்குமார் பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது: வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் பக்கவாத நோய் வருகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம் இருந்தால், உடனடியாகச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். சரியான சிகிச்சையும், மருந்துகள் உட்கொள்ளாமலும் இருந்தால், ரத்தக்குழாயில் அடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதால்தான் பக்கவாத நோய் வருகிறது. சிலநேரத்தில் உயர் ரத்த அழுத்தத்தால், ரத்தக்குழாய் வெடித்து அதிலிருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டாலும், இந்நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கெல்லாம் தீர்வு உடனடி சிகிச்சை மட்டுமே. பக்கவாத நோயைப் பொறுத்தவரை 2,000 பேரை எடுத்துக் கொள்ளும்போது, அதில் 10 சதவீதம் பேருக்கு இப்பாதிப்பு இருக்கிறது. பக்கவாதம் பாதித்தவரை நான்கரை மணிநேரத்துக்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்து, உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம், பக்கவாத நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். அதற்கான முழுக் கட்டமைப்பு, மருந்துகள் அனைத்தும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ரூ.50,000 மதிப்புள்ள ஊசி, மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாதத்துக்கு 100 முதல் 120 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக பக்கவாத நோய் சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டு, பக்கவாதநோயை முழுமையாக குணப்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரத்தக் கசிவு அதிகமாக இருந்தால் மூளை நரம்பியல் துறைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை அளிப்பதற்கான வசதியும் இருக்கிறது. சில சமயம் ரத்தக் குழாய் பலூன் போன்று விரிந்து வெடிப்பு ஏற்படலாம். அதற்கு இங்கு கேத் லேப் மூலம் ரத்தக் கசிவை நிறுத்துவதற்கான நரம்பு அறுவை சிகிச்சைப் பிரிவும் உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மூளை நரம்பியல் துறைப் பேராசிரியர் வி.ரவிக்குமார், மூளை அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் ஏ.மத்தியாஸ் ஆர்த்தர், பொது மருத்துவத் துறைத் தலைவர் நமசிவாயம், நிலைய மருத்துவ அலுவலர் ஏ.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago