வாகன ஓட்டுநர்களிடம் கட்டாயப்படுத்தி - ரூ.300 லஞ்சம் வாங்கிய : சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் : வேலூர் மாவட்ட எஸ்.பி., செல்வகுமார் நடவடிக்கை

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் நெல் கதிர் அறுக்கும் இயந்திர வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ குமார் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் தமிழக-ஆந்திர எல்லையில் வட்டார போக்குவரத்து துறை சோதனைச்சாவடியும், காவல் துறை சோதனைச்சாவடியும் அருகருகே உள்ளது. இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் சோதனை செய்வது வழக்கம். அதன்படி, கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி வழியாக தெலங்கானா மாநிலத்துக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நெற் கதிர் அறுக்கும் 5 இயந்திர வாகனத்தை நேற்று முன்தினம் மாலை ஓட்டுநர்கள் ஓட்டிச் சென்றுள்ளனர்.

அப்போது, சோதனை சாவடியை கடந்து சென்ற நெற் கதிர் அறுக்கும் இயந்திர வாகனங்களை பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாஷ் என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று நிறுத்தியுள்ளார். வாகன ஓட்டுநர்களிடம் பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதற்கு ஓட்டுநர் ஒருவர் மறுப்பு தெரிவித்தபோது ஏன், ‘ஆர்டிஓ-க்கு 500 ரூபாய் கொடுக் கும்போது தெரியவில்லையா?’ என கேட்டு ரூ.300 பணத்தை கட்டமாயமாக வாங்கிக்கொண்டு வாகனத்தில் மீண்டும் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது.

இது தொடர்பான புகாரை அடுத்து காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார். மேலும், லஞ்சம் வாங்கிய வீடியோ தொடர்பான அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாரிடம் சமர்ப்பித்தார்.

இதையடுத்து, ரூ.300 லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாசை தற்காலிக பணி நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE