ராணிப்பேட்டை மாவட்டத்தில் - 390 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் 390 விவசாயி களுக்கான ஆணைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

தமிழகத்தில் முதலமைச்சரின் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற் கட்டமாக 390 பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கி பேசும் போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,606 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், முதற் கட்டமாக 390 பேருக்கு இணைப்புகள் வழங்கப்படுகின்றன. 1 யூனிட் மின்சாரத்துக்கு 1 ரூபாய் குறைக்க விவசாயிகள் போராடினார்கள். ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஆட்சிக்கு வந்ததும் இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு கொடுத்தார்.

அவரது வழியில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு திட்டமும் மக்களை தேடிச் செல்லும் திட்டமாக செயல்படுத்தி வருகிறார். பத்தாண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் இலவச மின் இணைப்புக்காக காத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து ஆட்சிக்கு வந்ததும் இலவச மின் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மின்வாரிய பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகள் 4 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

இதில், சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மேற்பார்வை பொறியாளர் ராஜன்ராஜ், செயற்பொறியாளர்கள் குமரேசன், பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்