கோவை ராமநாதபுரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் செல்லும் வழித்தடத்தில் பதி நகர் உள்ளது. இங்கு பழைய கார் குடோன் செயல்பட்டு வருகிறது. பழைய கார்களின் உதிரி பாகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் குடோன் உள்ளே இருந்து புகை வந்தது. இதைக் கண்ட குடோன் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை, நிலைய அலுவலர் வேலுசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காரில் உள்ள பஞ்சுகள், டயர்களில் தீ பிடித்ததால் பல அடி உயரத்துக்கு கரும்புகை எழுந்து, தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கணபதி, பீளமேடு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தலா ஒரு வாகனங்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டன. சில மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்தில் பழைய கார்கள், உதிரி பாகங்கள் எரிந்து சேதமாகின. இச்சம்பவம் தொடர்பாக, ராமநாதபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago