டிஏபி-க்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் உரம் வேளாண் இணை இயக்குநர் பரிந்துரை :

By செய்திப்பிரிவு

விவசாயிகள் டிஏபி உரத்துக்கு மாற்றாக மணிச்சத்து நிறைந்த காம்ப்ளக்ஸ் உரத்தை பயன்படுத்த தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வசந்தரேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 1.23 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பல்வேறு பயிர் வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்களுக்கு உரமிடும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தேவையான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் போதிய அளவில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது. இருப்பினும், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் மற்றும் அங்கக உரங்களை விவசாயிகள் அதிக அளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும். இவ்வகை உரங்களும் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவை, 50 சதவீதம் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.

திரவ உயிர் உரங்களை பயன்படுத்தும்போது பேரூட்ட சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்கிறது. டிஏபி உரத்துக்கு மாற்றாக மணிச்சத்து அதிகம் உள்ள காம்ப்ளக்ஸ் உரங்களை ஏக்கருக்கு 1 மூட்டை வீதம் அடியுரமாக பயன்படுத்தலாம். இதன் மூலம் உரச் செலவை குறைத்திட முடியும். ரசாயன உரங்களுடன் நுண்ணுயிர் உரங்களை கலந்து இடக் கூடாது. சில்லரை உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டை இல்லாத யாருக்கும் உரம் வழங்கக் கூடாது. மேலும், விற்பனை முனைய இயந்திரம் மூலம் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உர விலை மற்றும் இருப்பு விவரம் அடங்கிய தகவல் பலகை, உர விற்பனை நிலையங்களில் விவசாயிகள் பார்வைக்கு வைக்க வேண்டும். விவசாயி அல்லாதோருக்கு உரம் விற்பனை செய்தல், வேறு மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்