ரேஷனில் சேமியா, பட்டாசுகளை விற்க வற்புறுத்தல் : சிவகங்கை பாம்கோ மீது ஆளும் கட்சி தொழிற்சங்கம் புகார்

By செய்திப்பிரிவு

சிவகங்கை பாம்கோ நிறுவனம் (சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை) கொள்முதல் குழு அனுமதி இல்லாத சேமியா, பட்டாசுகளை விற்க ரேஷன் கடை விற்பனையாளர்களை வற்புறுத்துவதாக ஆளும்கட்சி தொழிற்சங்கமான தொமுச புகார் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 147 பாம்கோ ரேஷன் கடைகள் உட்பட 829 கடைகள் உள்ளன. இக்கடைகளுக்குத் தேவையான பொருட்களை பாம்கோ நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் இருந்து கொள்முதல் செய்து அனுப்புகிறது. மேலும் சேமியா, ரவை, மைதா போன்ற பொருட்களையும் வெளி மார்க் கெட்டில் கொள்முதல் செய்து கடைகளுக்கு அனுப்புகிறது.

மேலும் பதிவாளர் அல்லது இணைப் பதிவாளர்களை கொண்ட கொள்முதல் குழு அனுமதிக்கும் பொருட்களை மட்டுமே வெளி மார்க்கெட்டில் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், சிவகங்கை பாம்கோ நிறுவனம் கொள் முதல் குழு அனுமதி இல்லாத சேமியாவை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி உள்ளது.

அதேபோல் அனுமதியின்றி பட்டாசுகளை, ரேஷன் கடைகளுக்கு பாம்கோ நிறுவனம் அனுப்பி விற்க வற்புறுத்துவதாக பாம்கோ தொமுச புகார் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாம்கோ தொமுச தலைவர் சரவணன் கூறியதாவது:

தரமில்லாத நிறுவனங்களின் சேமியா, பட்டாசுகளை விற்க வற்புறுத்தக் கூடாது என பதிவாளரிடம் வலியுறுத்தினோம். அவர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். ஆனால் அவருக்கு தெரியாமலேயே பாம்கோ நிறுவனம் ரேஷன் கடைகளில் பட்டாசுகளை விற்க வற்புறுத்துகிறது கூறினார்.

இதுகுறித்து பாம்கோ நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ சேமியா பாக்கெட்டுகளை ரேஷன் கடைகளில் இருந்து திரும்ப பெற்று விட்டோம்,’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்