மேட்டூர் அணை நீர்மட்டம் 107.18 அடியாக உயர்வு :

By செய்திப்பிரிவு

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்து நீர் மட்டம் 107.18 அடியாக உள்ளது.

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் (27-ம் தேதி) காலை விநாடிக்கு 37,162 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 32,982 கனஅடியாக சரிந்தது. காவிரி டெல்டா பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது.

இதனால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 100 கன அடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைக் காட்டிலும், நீர் திறப்பு குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று முன் தினம் அணையின் நீர்மட்டம் 105.14 அடியாக இருந்த நிலையில், நேற்று காலை 107.18 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 74.46 டிஎம்சி-யாக உள்ளது.

ஒகேனக்கல்லில் 3-வது நாளாக தடை

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 29 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று காலை அளவீட்டின் போது நீர்வரத்து விநாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால், ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 3-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 32 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருவதால், முதலைப் பண்ணை, மணல்திட்டு, ஆலம்பாடி, நாடார்கொட்டாய், ஊட்டமலை மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்