கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் புதிய புற்றுநோய் மையம் அமைக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைத்துறை சார்பில் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்தவிழிப்புணர்வு கருத்தரங்கம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. கருத்தரங்கை தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர்மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகியமாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிக அளவில் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்நோயை முழுமையாக அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடைகோடி கிராம மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அனைத்து வசதிகளுடன் கூடிய புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். நிகழ்ச்சியில் இந்திய அறுவை சிகிச்சை தமிழகப் பிரிவின் தலைவர் ராஜசேகர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருவாசகமணி, அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் ஜெயலால், கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago