தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் காப்பியங்கள் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, கல்லூரித் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் ரா.தங்கராஜ், ஆராய்ச்சி புலத்தலைவர் கோ.அர்ச்சுணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்த் துறை தலைவர் வீ.வெற்றிவேல் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை தலைவர் இரா.குறிஞ்சிவேந்தன் காப்பியங்கள் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் பேசியது:
மொழியின் மீது ஒவ்வொரு தமிழனும் பற்று வைத்திருத்தல் வேண்டும். பலமொழிகளை பயில வாய்ப்பு ஏற்பட்டாலும், நம் தாய்மொழியின் மீது தனிப்பட்ட பற்று வேண்டும். தமிழ் மொழி ஒரு மனிதனை மனிதாக வாழ வழிகாட்டுகிறது.
வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வருமானம் வரும்வழி பெரிதாக இருக்க வேண்டும். வெளியில் போகும் வழி சிறிதாக இருக்க வேண்டும். இதுவே சிறந்த வாழ்க்கைக்கு உரிய வழி.
எதை செய்யக்கூடாது என்பதை மகாபாரதமும், எதை செய்ய வேண்டும் என்பதை ராமாயணமும் எடுத்துக்காட்டுகின்றன. காப்பியங்களில் கண்ணகி, மாதவி, மணிமேகலை போன்றோரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நாம் உணர வேண்டும் என்றார்.
முன்னதாக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் ம.பூபதி வரவேற்றார். இறுதியாக தி.சங்கீதா நன்றி தெரிவித்தார். கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago