அடுத்த தேர்தல் வருவதற்குள் பெட்ரோல் விலை ரூ.150-ஐ தாண்டி விடும் என முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கரய்யர் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்சேரியில் முன்னாள் எம்எல்ஏவும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான ஆர்.ராமாமிர்த தொண்டைமானின் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கரய்யர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
பாஜக ஆட்சி வந்த பின்னர், பெட்ரோலிய பொருட்கள் தொடர்பாக எந்தவிதமான கவனமும் செலுத்தாமல் இருப்பதால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.100-க்கும் மேல் விற்கப்படுகிறது. இன்றைய தேதியில் கச்சா எண்ணெய் விலை உலக அளவில் மிகக் குறைவாக உள்ளது. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை மிக அதிகமாக உள்ளது. இது மிகப்பெரிய அநியாயம். இந்த ஆட்சியை மாற்றும் வரை இந்த சூழ்நிலை தான் இருக்கும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்குள் பெட்ரோல் விலை ரூ.150-ஐ தாண்டிவிடும் எனக் கூறினார்.
நிகழ்ச்சியில், தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், பெற்றோர்-ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் சு.கல்யாணசுந்தரம், காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன், திமுக நகரச் செயலாளர் சுப.தமிழழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago