அதிமுகவில் நிலவும் தற்போதைய சூழலானது வருத்தம் அளிக்கிறது என திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், குழுவின் தலைவரான சு.திருநாவுக்கரசர் தலைமையில் நேற்று கலையரங்க மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எம்எல்ஏ எஸ்.இனிகோ இருதயராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வே.பிச்சை, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் உட்பட அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் சு.திருநாவுக்கரசர் கூறியது:
திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்துக்குத் தேவையான ராணுவ நிலத்தைப் பெறுவது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இதுவரை 4 முறை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். மத்திய அமைச்சரிடமிருந்து விரைவில் உத்தரவு வரும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி சுமுகமாகத் தொடரும் என்றார்.
முன்னதாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதிகார வரம்புகளை தாண்டி ஆளுநர் செயல்படுவது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. பாஜகவுக்கு ஒத்துழைக்காத கட்சிகள் ஆளுகின்ற மாநிலத்தில், அரசை கலைக்கவோ, பழிவாங்கவோ ஆளுநரை பயன்படுத்துவது சட்டத்துக்குப் புறம்பானது. ஜனநாயகத்துக்கு விரோதமானதும்கூட. ஆளுநர் எல்லை மீறாமல் இருப்பதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது.
நான் ஆரம்ப காலகட்டத்தில் அதிமுகவுக்காக உழைத்தவன் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஜெயலலிதா அரசியலுக்கு வரும்போது அவருக்கு உறுதுணையாக இருந்தேன்.
ஆனால், அதிமுகவில் தற்போது நிலவும் சூழல் வருத்தம் தரக்கூடியதாக உள்ளது. சசிகலா அரசியல் பயணம் குறித்து மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago