வேலூர் கோட்டை வளாகத்தை : தூய்மைப்படுத்திய அஞ்சலக ஊழியர்கள் :

By செய்திப்பிரிவு

வேலூர் கோட்ட அஞ்சலகம் சார்பில் வேலூர் கோட்டை வளாகம் மற்றும் தொல் பொருள் நினைவுச்சின்னங்களை அஞ்சலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தூய்மைப்படுத்தினர்.

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, வேலூர் அஞ்சல் கோட்டம் சார்பில் அக்டோபர் 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தூய்மை இந்தியா இயக்கத்தை வேலூர் அஞ்சல் கோட்டம் கடைப்பிடித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வேலூர் கோட்டை வளாகம் மற்றும் தொல் பொருள் நினைவுச்சின்னங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. நிகழ்ச்சியில், வேலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கோமல்குமார் தலைமை வகித்தார். அஞ்சல் ஆய்வாளர் ஆனந்தன் வரவேற்றார். மக்கள் தொடர்பு அதிகாரி செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

இதில், அஞ்சலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு வேலூர் கோட்டை வளாகத்தில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். வேலூர் கோட்டை பாரம்பரியம் மிக்க கட்டிடம் என்பதால் அவற்றை பாதுகாத்து தூய்மையாக்கும் முயற்சியில் அஞ்சலக ஊழியர்கள் ஈடுபட்டனர். கோட்டை வளாகத்தில் பல்வேறு இடங்களில் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை, பிளாஸ்டிக் கவர்கள், கேரிபேக் கழிவுகளை சேகரித்தனர்.

இதுகுறித்து வேலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப் பாளர் கோமல்குமார் கூறும்போது, ‘‘இந்தியாவின் சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு இம்மாதம் இறுதி வரை தூய்மை இந்தியா இயக்கத்தை அஞ்சலகம் கடைப்பிடித்து வருகிறது.

அதன்படி, வேலூர் கோட்டை வளாகம் தூய்மையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். வேலூர் கோட்டை வளாகம் நம் மாவட்டத்தின் பாரம்பரியமான கட்டிடமாகும். எனவே, இங்கு சுற்றுலா வரும் மக்கள் நம் அடையாள சின்னங்களை தூய்மையுடனும், பாதுகாப்புடனும் வைத்துக்கொள்ள வேண்டும். இது போன்ற தூய்மை இயக்க திட்டத்தில் பொதுமக்கள்தங்களை முழுமையாக இணைத் துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்