பள்ளிகளின் உறுதித்தன்மை அறிக்கை கேட்டு ஆட்சியர் உத்தரவு :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திறக்கப்பட உள்ள பள்ளிகளின் உறுதித்தன்மை குறித்த அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, கல்வி மாவட்ட அலுவலர் அங்குலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் 619 அரசுப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த பள்ளிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆய்வு செய்து முன்னேற்பாடு பணிகளையும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அதை கருத்தில் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.

நிதி பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து தனது கவனத்துக்கு கொண்டு வரவேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்