கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஆயத்தம் : முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

By செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை தொடர்பாக சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர், செயலர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல்மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் ஆகியோர் அனைத்து துறைஅலுவலர்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடத்தினர்.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:

கடலூர் மாவட்டத்தில் மிக தாழ்வான பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள 278 பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்க புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக முகாம்கள் ஆகியவற்றை தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், சாலைகளில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அகற்ற தேவையான கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்றார் போல் நீரை வெளியேற்றவும், குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கவும்,மழைக்காலங்களில் மழைநீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தி பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நடமாடும் மருத்துவ குழு அமைத்து தயார் நிலையில் இருக்கவும்,அனைத்து முகாம்களிலும் பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பால் உள்ளிட்ட உணவுதயாரிக்க போதுமான அத்தியாவசியப் பொருட்களை தயார் நிலையில் வைக்கவும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் தொடர்பான தகவல்கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் பேரிடர்தொடர்பான தகவலை தெரிவிக்க பொதுமக்களின் பயன்பாட்டிற்கு 04142-221113, 233933, 221383 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இது தவிரகட்டணமில்லா தொலைபேசி எண்ணான1077-ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, பேரிடர் தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் முன்னெச்சரிக்கை அமைப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது போல முன்னெச்சரிக்கை அமைப்பு மாவட்டம் முழுவதும் 86 இடங்களில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதது.

தொடர்ந்து கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பேரிடர் உபகரணங்களான மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், ஜெனரேட்டர், பம்ப்செட், மரம் அறுக்கும் இயந்திரம் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு செயல் நடவடிக்கைகளில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலை துறை) பரந்தாமன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்