பாண்லே தற்காலிக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் பாண்லே தற்காலிக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுஅளிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதியம் நவம்பர் 1 முதல்நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சட்டப்பேரவையில் அறிவித்தபடி அரசுத் துறைகளில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வரும் தற்காலிக ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி, பாண்லே நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

அதன்படி ரூ.7 ஆயிரம் தொகுப்பூதியம் பெறும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தப்படும். 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து நாளொன்றுக்கு ரூ.176 ஊதியம் பெற்றுவந்த தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.430-ஆக உயர்த்தப்பட்டு மாதம்தோறும் ரூ.13,000 வழங்கப்படும்.

5 ஆண்டுகளுக்கு குறைவாக வேலை செய்து நாளொன்றுக்கு ரூ.176 வீதம் ஊதியம் பெறும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.330-ஆக உயர்த்தப்படும். இதன்மூலம் இவர்களது மாத ஊதியம் ரூ.10 ஆயிரமாக இருக்கும். உயர்த்தப்பட்ட இந்த ஊதியம் நவம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம் தொகுப்பூதியம் பெறும் 18 ஊழியர்களும், தினக்கூலி பெறும் 247 தற்காலிக ஊழியர்களும் பயனடைவர். இதனால் பாண்லே நிறுவனத்துக்கு மாதம் சுமார் ரூ. 25 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும்.

அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி

“புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைக்கு பதிலாக தலா ரூ.500 பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத் தப்படும்” என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

முகவர்களுக்கு தீபாவளி முன்பணம்

மேலும், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். பணியின்போது மரமணடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க பரிசீலிக்கப்பட்டு, முதல்கட்டமாக 6 நபர்களுக்கு விரைவில் பணி வழங்கப்பட உள்ளது. பாண்லே நிறுவனத்துக்கு பால் வழங்கிய 101 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ரூ.1-க்கு 5 காசுகள் விலை வித்தியாசத் தொகை தீபாவளிக்கு முன்னர் வழங்கப்படும். இதன்மூலம் 7,100 பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர். முகவர்களுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் சுமார் 100 நபர்களுக்கு ரூ.12 லட்சம் தீபாவளி முன்பணம் வழங்கப்படும். மேலும், 2020-21-ம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட பாலுக்கு சிறப்பு விற்பனை தள்ளுபடி தொகையாக லிட்டர் ஒன்றுக்கு 2 காசுகள் வீதம் ரூ.5.40 லட்சம் தீபாவளிக்கு முன்னதாக முகவர்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம் 215 முகவர்கள் பயன்பெறுவர்.

காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான காவலர், ஊர்காவல்படை வீரர்கள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

‘பிரதமரை சந்திக்க எப்போது டெல்லி செல்வீர்கள்?’ என்று தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தலையை அசைத்தபடி, “செல்வோம்’’ என்று முதல்வர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்