பொதுநல வழக்குகளுடன் உரிய ஆவணங்களையும் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த அப்துல்லா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் வேளாண் துறையின் மானியத் திட்டங்களில் 2013 முதல் முறைகேடு நடைபெற்று வருகிறது. வேளாண் இயக்குநர்கள், அதிகாரிகள், உதவியாளர்கள் என பலர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் வேளாண் அமைச்சரின் உறவினரான வேளாண் இயக்குநரான தட்சிணாமூர்த்தி, 2016 முதல் 2021 வரை பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
சொட்டுநீர் பாசனத் திட்டத்துக்கான உபகரணங்கள் வழங்குவது, மானிய இயந்திரங்கள் கொள்முதல் செய்தல், விதை கொள்முதல் செய்தல், கேமரா, டேப்லெட், கம்ப்யூட்டர் கொள்முதல் செய்தல், நீர்நிலை மேம்பாட்டு முகமை திட்டம், நிலையான நீர்ப்பாசனத் திட்டம், உழவர் உற்பத்தியாளர் குழுத் திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம், குறுவை சம்பா காப்பீட்டு திட்டங்கள் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தமிழக வேளாண் துறையில் கடந்த 2013 முதல் 2021 வரை ரூ.1000 கோடி முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைசுவாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் தலைமை நீதிபதி, மனுதாரர் மனுவுடன் வழக்குக்கு தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. பொதுநல வழக்குகளை தாக்கல் செய்யும்போது வழக்கு தொடர்பான முழுமையான ஆவணங்களையும் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago