திருச்சியில் ‘வாடிக்கையாளர்களை நோக்கி வங்கிகளின் சங்கமம்’ என்ற பெயரில் நடைபெற்ற முகாமில், பயனாளிகள் 1,941 பேருக்கு ரூ.161.30 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகள் நேற்று வழங்கப்பட்டன.
விவசாயிகள், சில்லறை வியாபாரிகள், சிறு-குறு- நடுத்தர தொழில்முனைவோர் உட்பட வங்கியின் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களும் வங்கியின் பல்வேறு விதமான கடன் விவரங்கள், வங்கிகளின் இதர சேவைகள், டிஜிட்டல் பேங்கிங் ஆகியன குறித்து ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முகாமில் பேங்க் ஆஃப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, பெடரல் வங்கி, ஐடிபிஐ, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, டிபிஎஸ் பேங்க், பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, தனலட்சுமி வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, சவுத் இந்தியன் பேங்க், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஆகியவை சார்பில் 30 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தொடங்கிவைத்து, விவசாயக் கடன், சுய உதவிக் குழு கடன், குறு- சிறு- நடுத்தர தொழில்முனைவோர் கடன், வீட்டு வசதி கடன், கல்விக் கடன், வாகன வசதி கடன், தனிப்பட்ட நுகர்வோர் கடன் என பயனாளிகள் 1,941 பேருக்கு ரூ.161.30 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் லட்சுமி வெங்கடேஷ் சிறப்புரையாற்றினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் கே.வேலாயுதம், பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் அமித் வொமா, இந்தியன் வங்கி துணைப் பொது மேலாளர் ஆர்.ராஜேந்திரன், கனரா வங்கி துணைப் பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாம் நடைபெற்ற வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் அளித்த பயிற்சி பெற்றவர்கள் தயாரித்த பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமும் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago