அரசு மருத்துவமனை வரலாற்றில் முதன்முறையாக - செயற்கை எலும்பு பொருத்தி அறுவை சிகிச்சை : துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் சாதனை

By செய்திப்பிரிவு

அரசு மருத்துவமனை வரலாற்றிலேயே முதன்முறையாக செயற்கை எலும்புகளை பொருத்தி சவாலான அறுவை சிகிச்சையை செய்து திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் சாதனை படைத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் கன்னிராஜாபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (67). கூலித் தொழிலாளி. இவர் 2 ஆண்டுக்கு முன்பு விபத்தில் சிக்கியதில் இடது தொடை எலும்பு உடைந்தது. இதையடுத்து ரூ.3 லட்சம் செலவு செய்து தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் கால் ஊன்றி நடக்க இயலவில்லை.

இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பழனிச்சாமி சிகிச்சை பெற வந்தார்.

இவரை பரிசோதித்த மருத்துவமனையின் எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் விஸ்வநாத், தொடை எலும்பின் கீழ்பகுதி பல துகள்களாக நொறுங்கி, ரத்த ஓட்டம் இல்லாமல் உயிரற்ற நிலையில் இருப்பதும், உள்ளே வைக்கப்பட்டிருந்த பிளேட் உடைந்திருப்பதும் தெரியவந்தது.

துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் இதற்கான மருத்துவ உபகரணங்கள் இல்லை என்ற போதிலும், மருத்துவர் ஜான் விஸ்வநாத், தனது சொந்த உபகரணங்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து பெற்ற உபகரணங்களை கொண்டு நேற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

இதில், தனியார் மயக்கவியல் மருத்துவர் பாரதி, செவிலியர்கள் தமிழ்ச்செல்வி, பிரபா, தனலட்சுமி, உதவியாளர் கோபி, கலா ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏறத்தாழ ஏழரை மணி நேரம் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். பழனிச்சாமியின் இடுப்பு எலும்பிலிருந்து 500 கிராம் எலும்பு ஒட்டுகள் எடுக்கப்பட்டு, அந்த வெற்றிடத்தை வேலூர் சிஎம்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட அதிநவீன செயற்கை எலும்புத் துண்டுகளால் நிரப்பப்பட்டது.

பின்னர், உடைந்த இடது தொடை எலும்பின் கீழ்புறம் திறக்கப்பட்டு, உடைந்த பிளேட், ஸ்குரூக்கள் அகற்றப்பட்டு, உயிரற்ற எலும்புகள் அகற்றப்பட்டு, இடுப்பில் எடுக்கப்பட்ட சிறு எலும்பு துண்டுகள் நெருக்கமாக பொருத்தப்பட்டன. தொடர்ந்து லாக்கிங் கம்பிரஷன் பிளேட்டுகளும் பொருத்தப்பட்டன.

இதுகுறித்து மருத்துவர் ஜான் விஸ்வநாத் கூறியது:

இந்திய அரசு மருத்துவமனைகளின் வரலாற்றிலேயே முதன்முறையாக.அதி நவீன செயற்கை எலும்புகள், நோயாளியின் எலும்பு துண்டுகளோடு கலந்து எலும்பு ஒட்டு உறுப்பு (Bone Graftig) செய்யப்பட்டது.

நோயாளிக்கு சர்க்கரை வியாதியின் பாதிப்பு, இதய பலவீனம் இருந்தும், இந்த அதிநவீன, சவாலான அறுவை சிகிச்சை இந்த சிறிய மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது மிகப் பெரிய சாதனையாகும்.

இதுபோன்ற எண்ணற்ற அரிய நவீன எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சைகள் கடந்த ஓராண்டாக இந்த மருத்துவமனையில் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

இந்த மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள், உயிர் மீட்பு அறுவை சிகிச்சை கருவிகள், மயக்க மருந்து கருவிகள் மட்டுமல்லாது இரு மயக்க மருந்து நிபுணர்கள் முழுநேரப் பணியில் நியமிக்கப்பட வேண்டும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்