ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதியோர்களுக்கான கட்டணம் இல்லாத உதவி எண் வசதியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை இணைந்து தமிழக அரசு சார்பில் முதியோர் உதவி எண் 14567 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று முன்தினம் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.
இந்த முதியோர் உதவி எண் மூலம் முதியோர் இல்லங்கள், பராமரிப்பு மையம், பராமரிப்பாளர்கள், மருத்துவ ஆலோசனை வழங்குமிடங்கள், வலி நிவாரண மையங்கள் குறித்து முதியோர்களுக்கு தேவைப்படும் தகவல்கள் அளிக்கப்படும். மேலும், அரசு திட்டங்களை பெறும் வழிமுறைகள், சட்ட வழிகாட்டுதல்கள், பராமரிப்பு சட்டம் குறித்த வழிகாட்டுதல்கள், மனநல ஆலோசனைகள், ஆதரவற்ற முதியோர் மீட்பு, குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிறரால் துன்புறத்தப்படும் முதியோர்களுக்கு ஆதரவு அளித்து பிரச்சனைகளை தீர்வு காணுதல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளன.
முதியோர்களுக்கான அனைத்து ஆலோசனைகள் அல்லது வழிகாட்டுதல்களுக்கு கட்டண மில்லாத இந்த தொலைபேசி சேவையை அனைத்து நாட்களிலும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago