கவிஞர் புவியரசுக்கு 90 வயது நிறைவு பெற்றதையொட்டி, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில், ‘புவி - 90’ என்ற பெயரில் கோவை இந்தியத் தொழில் வர்த்தக சபை அரங்கில் நேற்று விழா நடைபெற்றது. இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளர் அரங்கசாமி வரவேற்றார். கவிஞர் புவியரசு பற்றிய ‘புவி - 90’ என்ற பெயரிலான ஆவணப்படம் திரையிடப்பட்டது. கவிஞர் புவியரசுக்கு நினைவுப்பரிசாக புத்தர் சிலை மற்றும் வாழ்த்துப் பட்டயம் ஆகியவற்றை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வழங்கினார். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் எம்.கிருஷ்ணன், இந்திய தொழில் வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் டி.பாலசுந்தரம் ஆகியோர் கவிஞர் புவியரசுக்கு மரியாதை செய்தனர்.
தொடர்ந்து, எழுத்தாளர்கள் மரபின்மைந்தன் முத்தையா, இயாகோகா சுப்ரமணியம், எம்.கோபாலகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிறைவாக, கவிஞர் புவியரசு ஏற்புரையாற்றினார். அவர் பேசும்போது, “விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பல சிறப்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. இதற்கு முன்னரும் பல நிகழ்வுகளை நடத்தியுள்ளனர். அவற்றில் எல்லாவற்றிலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கு வாய்ப்புகள் அமையவில்லை.
நான் அதிக மொழி பெயர்ப்புகளை மேற்கொண்டுள்ளேன். கவிதைகளை எழுதியுள்ளேன். எப்போதும் பெரியார், திருவள்ளுவர், வள்ளலார், மார்க்சிஸம்என பிரித்துப் பார்த்ததில்லை” என்றார். இதையடுத்து, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் விருந்தினர்களுக்கு நூல்கள் அளிக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago