பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிப்பிற்காக, ஈரோடு கவுந்தப்பாடியில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பிலான நாட்டுச்சர்க்கரை மற்றும் வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி, கவுந்தப்பாடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் கரும்பினைக் கொண்டு நாட்டுச் சர்க்கரை, வெல்லம் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இதனை விற்பனை செய்ய கவுந்தப்பாடியில் கூட்டுறவுத்துறை மற்றும் தனியார் சார்பில் சந்தை செயல்பட்டு வருகிறது.
பழநி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தம் தயாரிக்க, கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் இருந்து நாட்டுச்சர்க்கரை கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். தேவஸ்தானம் சார்பில் சர்க்கரை கொள்முதல் செய்ய வருவது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். இதுகுறித்து விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நாட்டுச் சர்க்கரையை தேவஸ்தான அதிகாரிகள் கொள்முதல் செய்து எடுத்துச் செல்வார்கள்.
இதன்படி, நேற்று முன்தினம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில், 60 கிலோ எடை கொண்ட நாட்டுச்சர்க்கரை மூட்டை, ரூ.2 ஆயிரத்து 550 முதல் ரூ.2 ஆயிரத்து 640 வரை விலைபோனது. விற்பனைக்கு வந்த 700 மூட்டைகளில் 649 மூட்டைகளை, பழநி தண்டாயுதபாணி கோயில் தேவஸ்தான நிர்வாகத்தினர் கொள்முதல் செய்தனர்.
இதேபோல், உருண்டை வெல்லம் 25 மூட்டை வரத்தானது. ஒரு மூட்டை ரூ.1,350-க்கு விற்பனையானது. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, ரூ.17.07 லட்சத்திற்கு பழநி தேவஸ்தானம் வாங்கியதாக, ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago