புதுச்சேரியில் பிரபல ரவுடி உட்பட இருவரை மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர்.
புதுச்சேரி வாணரப்பேட்டை தாவீதுபேட் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (எ) பாம் ரவி (33). ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. ரவி தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே இருந்தார். இவர் நேற்று வாணரப்பேட்டை முருகசாமி நகரைச் சேர்ந்த தனது நண்பரான பரிடா அந்தோணி பன் (28) என்பவருடன் பைக்கில் வாணரப்பேட்டை அலோன் வீதி - ராஜராஜ வீதி சந்திப்பில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், ரவியின் பைக்கை மறித்து நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில் ரவி, அந்தோணி ஆகியோருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. உடனே உஷாரான ரவி, பைக்கை அங்கேயே போட்டுவிட்டு ஓடியுள் ளார்.
அப்போது அந்த கும்பலிடம் சிக்கிய அந்தோணியை அவர்கள் சரமாரியாக வெட்டினர். தொடர்ந்து ரவியை துரத்திச் சென்ற கும்பல், ராஜராஜன் வீதியில் இருந்து காளியம்மன் தோப்பு வீதிக்கு செல்லும் ஒரு குறுகிய சந்தில் மறித்து சரமாரியமாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த ரவியும், அந்தோணியும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். வெடிகுண்டு சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையறிந்த சட்டம் - ஒழுங்கு சீனியர் எஸ்பி லோகேஷ்வரன், எஸ்பி விஷ்ணுகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரவி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லதுஏற்கெனவே உள்ள முன்விரோ தத்தில் கொலை நடந்ததா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் விசாரணைக்குப் பிறகே முழு தகவல் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago