காஷ்மீரின் வளர்ச்சியை தடுக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா 3 நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அவர் முதல் முறையாக அங்கு சென்றுள்ளார். தனது பயணத்தின் 2-ம் நாளான நேற்று ஜம்முவில் ஐஐடி-யின் புதிய வளாகத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பகவதி நகர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
ஜம்மு பகுதிக்கு முந்தைய ஆட்சியாளர்கள் பாகுபாடு காட்டினர். இப்பகுதி மக்களுக்கு இதுவரைஇழைக்கப்பட்டு வந்த அநீதி முடிவுக்கு வந்துள்ளது. இனிமேல் இப்பகுதி மக்களுக்கு யாரும் அநீதிஇழைக்க முடியாது. வால்மீகிகள், பஹாரிகள், குஜ்ஜார்கள், பகர்வால்கள், மேற்கு பாகிஸ்தான் அகதிகள், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நீதி கிடைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரின் தலைமையின் கீழ், ஜம்மு பகுதியில் வளர்ச்சிக்கான புதிய சகாப்தம் தொடங்கி உள்ளது. இப்போது ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் சமமான வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது. ஆனால் சிலர் இப்பகுதிக்கான வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கின்றனர். இதைஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அனைத்து சமூகத்தினருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வன உரிமைகள் சட்டம்,குறைந்தபட்ச ஊதிய சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
ஜம்மு பகுதியில் அடுத்த 2 ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். ஜம்மு விமானநிலையம் விரிவாக்கம் செய்யப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும். இதுவரை ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு குவிந்துள்ளது. இதை 2022-க்குள் ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago