வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வட கடலோர தமிழகத்தில் 1.5 கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அக்.25-ம் தேதி (இன்று)புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கன முதல்மிக கனமழை பெய்யும். ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதரமாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.
26-ம் தேதி (நாளை) சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும் பெய்யும். இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
27, 28-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், கோவை, சேலம்,மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் 9 செ.மீ., நீலகிரி மாவட்டம் பந்தலூர் 8 செ.மீ., தேனி மாவட்டம் பெரியாறு, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் 26-ம்தேதி (நாளை) வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago