சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் சாலையோரக் கடைகளில் குத்தகைதாரர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
காரைக்குடி நகராட்சியில் சாலையோரக் கடைகள், தற்காலிகக் கடைகளுக்கு கட்டணம் வசூலிக்க குத்தகை விடப்பட்டுள்ளது. குத்தகை கட்டுப்பாட்டு விதிகளின்படி நாள் ஒன்றுக்கு தள்ளுவண்டி கடை, 15 சதுர அடி கடைக்கு ரூ.25, பத்து சதுர அடி கடைக்கு ரூ.20, இருபது சதுர அடி கடைக்கு ரூ.30, பேருந்து நிலையங்களில் பாசி, பவள விற்பனை கடைக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீபாவளி, பெங்கல், ஆயுதபூஜை போன்ற விழாக் காலங்களில் அக்கடை களில் இருமடங்கு கட்டணம் வசூலிக்க நகராட்சி நிர்வாகம் குத்தகைதாரருக்கு அனுமதி வழங்கியுள்ளது. நவ.4-ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி காரைக்குடி செக்காலை ரோடு, 100 அடி சாலை, கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கடைகளில் குத்தகை தாரர்கள் தங்கள் இஷ்டம்போல் ரூ.300 முதல் ரூ.1,000 வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். அதேபோல் ஏற்கெனவே உள்ள சாலையோர வியாபாரிகளிடமும் இதே கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும் கட்டண ரசீதும் கொடுப்பதில்லை என்கின்றனர்.
இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் கூறியதாவது: தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்புதான் சாலையோரக் கடைகளில் வியாபாரம் நடக்கும். வியாபாரம் சூடு பிடிக்காத நிலையில் தினமும் எங்களிடம் ரூ.300 முதல் ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
மேலும் நாங்கள் எந்த கடைக்கு முன்பாக கடை வைத்துள்ளோமோ, அந்த கடை உரிமையாளர்கள் தனியாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வாடகைக் கட்டணம் வாங்கி கொள்கின்றனர். இதைக் கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘புகார் குறித்து விசாரித்து நடவ டிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago