ஈரோட்டில் ஒரு வாரமாக தொடரும் மழை - நீர் நிலைகள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி :

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நகரப்பகுதியை ஒட்டியுள்ள குளங்கள், தடுப்பணைகளில் நீர் நிரம்பியுள்ளதால், நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் உள்ள சூரம்பட்டி தடுப்பணை நிரம்பிய நிலையில், உபரி நீர் பெரும்பள்ளம் ஓடையில் செல்கிறது. இதேபோல் கோபி, அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் தொடர் மழையால், இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. இதனால், அணைக்கு வரும் விநாடிக்கு 442 கனஅடி நீர், உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. வரட்டுப்பள்ளம் அணையை ஒட்டிய வாய்க்காலில் சென்ற உபரி நீரால், குருநாதசுவாமி கோயிலை நீர் சூழ்ந்தது. எண்ணமங்கலம் ஏரி நிரம்பியதால், அங்கிருந்து வெளியேறிய உபரி நீரால், மூலக்கடை, குருநாதபுரம், புதுப்பாளையம் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இப்பகுதியில் உள்ள கெட்டி சமுத்திரம், பெரிய ஏரி ஆகியவையும் வேகமாக நிரம்பி வருகின்றன.

குண்டேரிப்பள்ளம் அணையில் 41.75 அடி வரை நீரைத் தேக்கி வைக்க முடியும் என்ற நிலையில், தற்போது அணையின் நீர் மட்டம் 36.43 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்வதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாகத் தொடரும் நிலையில், நேற்று மாலை விநாடிக்கு 5412 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு 2300 கனஅடியும், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 200 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றில் விநாடிக்கு 2900 கனஅடி உபரி நீர் திறக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்