ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ராசிபுரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராசிபுரத்தில் பிரசித்த பெற்ற நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 21-ம் தேதி கிராம சாந்தி, 22-ம் தேதி முதல்கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு கோ பூஜை, கஜ பூஜை, தம்பதி பூஜை மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகா சங்கல்பமும், மகா பூா்ணாஹுதியும், மேள தாள ஊா்வலத்துடன் புனித நீா் அடங்கிய கலசங்கள் பட்டாச்சாரியா்களால் யாக சாலையிலிருந்து கொண்டுவரப்பட்டன. காலை 10 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து மூலவா், பரிவார மூா்த்திகளுக்கு புனித நீா் ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், முன்னாள் எம்பி பி.ஆர்.சுந்தரம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட ராசிபுரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE