தொடர் மழையால் - சேரும் சகதியுமாக மாறிய சேலம் பேருந்து நிலையம் : பாதாள சாக்கடை திட்டப் பணி இடங்களை சீரமைக்க கோரிக்கை

தொடர் மழை காரணமாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்ற பகுதிகள் சேரும் சகதியுமாக மாறியுள்ளது. இப்பகுதிகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கியதில் இருந்தே சேலத்தில் அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே பாதாள சாக்கடைப் பணிக்காக நீண்ட பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது.

இதேபோல, பேருந்து நிலையம் அருகேயுள்ள மெய்யனூர் சாலை நுழைவு வாயிலில் அருகேயும் பெரிய பள்ளம் தோண்டி மூடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பள்ளங்கள் மண் போட்டு மூடப்பட்டுள்ளது. அவற்றில் தார் சாலை அமைக்கவில்லை.

இதனால், அடிக்கடி பெய்யும் மழையினால் இப்பணிக்கு தோண்டப்பட்ட பள்ளங்கள், குழிகளாக மாறி அவற்றில் மழைநீர் குளம்போல தேங்கி சேரும் சகதியுமாக மாறியுள்ளது. இப்பள்ளத்தின் மீது பேருந்துகள் செல்லும்போது பள்ளத்தில் இருந்து சகதி வெளியேறி பேருந்து நிலைய வளாகம் முழுவதுமே சேறாக மாறிவருகிறது.

மேலும், இப்பள்ளங்களில் பேருந்துகள் செல்லும்போது, பயணிகள் மீது சேற்றை இறைத்து செல்லும் நிலையுள்ளது. இதனால், பயணிகளுக்கும், பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு பொருட்களை வாங்க பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், பேருந்து நிலையத்தில் நிலவும் சூழல் பயணிகளை வெறுப்படைய செய்து வருகிறது. எனவே, பேருந்து நிலையத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்ற பகுதியில் தார் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்