காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் உலக அயோடின் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா தலைமை வகித்தார். தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு நலச்சங்க கிருஷ்ணகிரி இயக்குநர் ஜாய், பென்னாகரம் நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க நிர்வாகி சம்பத்குமார், காரிமங்கலம், பாலக்கோடு ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கல்லூரி முதல்வர் கீதா, சர்வதேச ஊட்டச் சத்து திட்ட அலுவலரான சென்னையைச் சேர்ந்த சையத் அகமது ஆகியோர் கலந்து கொண்டார்.
மருத்துவர் பானு சுஜாதா பேசும்போது, அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் குறித்தும், பெண்களுக்கும், கருவுற்ற தாய்மார்களுக்கும், கருவிலுள்ள குழந்தைகளுக்கும் அயோடினின் அவசியம் குறித்தும் விளக்கினார்.
சிறப்பு அழைப்பாளர் சையத் அகமது பேசும்போது, நாளொன்றுக்கு ஒரு மனிதன் 5 கிராம் உப்பு மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆனால், சராசரியாக 10 முதல் 15 கிராம் உப்பை நாம் தினமும் உட்கொள்கிறோம். இது, இதய நோய்களை ஏற்படுத்தி விடும். உப்பை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மனித உடலுக்கு ஆயுட்காலத்தில் வெறும் 3 கிராம் அளவுக்கு மட்டுமே அயோடின் தேவைப்படுகிறது. அதற்கேற்ப அயோடின் கலந்த உப்பு தயாரிக்கப்படுகிறது. உப்பில் அயோடின் அளவு சற்று ஏறக்குறைய இருந்தாலும் கூட தேவைக்கு போக எஞ்சிய அயோடினை உடல் சிறுநீர் மூலம் வெளியேற்றி விடும் என்று தெரிவித்தார்.முன்னதாக, அயோடின் பற்றாக்குறை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், டீத்தூள், தேன், நெய், உப்பு போன்ற உணவுப் பொருட்களில் வீட்டளவிலேயே கலப்படம் கண்டறிவது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிவில், கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பூங்கொடி நன்றி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago