தனியார் துறையில் இடஒதுக்கீடு முறையை ஏற்படுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக் குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:
நம் நாட்டில் மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் ஒவ்வொரு சட்டமும் நிறைவேற்றப்படுகிறது. எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அதிக அளவில் அதிகாரத்தை வழங்கி, அதன் மூலம் மேற்குவங்கம், தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களையும் தங்களது காவல் படைக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது. மக்களை அச்சத்தில் ஆழ்த்துவதற் காக சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறை உள்ளிட்ட முகமைகள் பயன்படுத் தப்படுகின்றன. இந்த நிலை மாறும் என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கூறியது:
தனியார் துறையிலுள்ள வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையை ஏற்படுத்த வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் நடவடிக்கையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்த ரமாக அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளம் அணு உலை விரிவாக்கம் மற்றும் அணுக்கழிவு மையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றார்.
முன்னதாக, இக்கூட்டத்தில் மாநிலத் தலைவராக நெல்லை முபாரக், துணைத் தலைவர்களாக எஸ்.எம்.ரபீக் அகமது, பி.அப்துல் ஹமீது, பொதுச் செயலர்களாக எம்.நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், எஸ்.அகமது நவவி, பொருளாளராக எஸ்.அமீர் ஹம்சா, செயலாளர்களாக டி.ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், நஜ்மா பேகம் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், அகில இந்திய துணைத் தலைவர் தெகலான் பாகவி, பொதுச் செயலாளர் அப்துல் மஜீத், செயற்குழு உறுப்பினர் அப்துல் மஜீத் பைஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago