தமிழக அரசு மருத்துவமனைகளிலேயே முதல் முறையாக - 11 வயது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை : சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை சாதனை

By சி.கண்ணன்

தமிழக அரசு மருத்துவமனைகளிலேயே முதல் முறையாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பேரனுக் காக தனது ஒரு சிறுநீரகத்தை பாட்டி தானம் கொடுத்துள்ளார்.

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் ராஜா. கூலித்தொழிலாளி. இவரது மனைவி காயத்ரி. இவர்களின் மூத்த மகன் அக்‌ஷயராஜ். கடந்த 2013-ம் ஆண்டு நாள்பட்ட சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மாத்திரை, மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் திடீரென்று சிறுநீரகங்கள் செயலிழந்ததால் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு சிறுவன் சென்றான்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து வந்த சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வாக இருந்தது. சிறுவனின் தந்தையின் தாயான (பாட்டி) 65 வயதான மணிமேகலை தனது ஒரு சிறுநீரகத்தை பேரனுக்கு தானம் கொடுக்க முன்வந்தார்.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி சிறுநீரக மருத்துவத் துறை மருத்துவர் பலராமன், சிறுநீரக அறுவைச் சிகிச்சை மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமார் மற்றும் மருத்துவர்கள் மாலதி, வேல்முருகன், சரவணன், மயக்க மருத்துவர் கிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் 4 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து ஒரே நேரத்தில் பாட்டியிடம் இருந்து ஒரு சிறுநீரகத்தை எடுத்து பேரனுக்கு வைத்தனர்.

அறுவைச் சிகிச்சைக்குப்பின் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சிறுவன் தற்போது நலமுடன் உள்ளார். தனியார் மருத்துவமனையில் ரூ.15 லட்சம் வரை செலவாகும் இந்த மாற்று அறுவைச் சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே முதல் முறையாக சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது: தென்கிழக்கு ஆசியாவிலேயே குழந்தைகளுக்கான மிகப்பெரிய மருத்துவமனையாக திகழும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கூட 40 ஆண்டுகளாக ஒரு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை கூட நடைபெறவில்லை. தற்போது முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடந்திருப்பது மிகப்பெரிய சாதனையாகும்.

சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசி, சிறுநீரக மருத்துவத்துறை மருத்துவர் பலராமன் ஆகியோரின் முழு முயற்சியால் இந்த அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது.

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக மருத்துவத்துறை, சிறுநீரக அறுவைச் சிகிச்சை துறை மூடப்பட்டுவிட்டது. கடந்த 3 மாதங்களில் மட்டும் டயலிசிஸில் இருந்த 5 குழந்தைகள் இறந்துவிட்டனர்.

இதர உயர் சிறப்பு துறைகள் அதிகம் வரவேண்டும். தமிழகத்தில் 74 பேருக்கு ஒரு மருத்துவர் என உலக அளவில் அதிக மருத்துவர்களை கொண்டுள்ள மாநிலத்தில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.

ஆனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் அரசு மருத்துவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. உரிய ஊதியத்தை வழங்கிவிட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லக்கூடாது என்ற உத்தரவை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்