மகளிருக்கான மாநிலக் கொள்கை உருவாக்குவதற்கான 3-வது கருத்துப்பட்டறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜூவன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் தலைமையில் மதுரையில் நடைபெற்றது.
பின்னர் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 16 குழந்தைகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.52 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், மண்டல நன்னடத்தை அலுவலர்களுக்கு 19 ஜீப்புகள் வழங்கப்பட்டன.
பின்னர், அமைச்சர் பி.கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தைகள், பெண் களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் என்பதற்காக முதல்வர் முனைப்போடு செயல்படுகிறார். கடந்த கால ஆட்சியில் திருமண உதவித்தொகை திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் திருமண உதவித் தொகைக் காக ரூ.862 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைப்பதற்காக காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம், என்றார்.
பின்னர், டி.ஆர்.ஓ காலனியில் குழந்தைகள் மையம், காமராஜர் சாலையிலுள்ள அரசு கூர்நோக்கு இல்லம், அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிக்கர், இயக்குநர் த.ரத்னா, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட குழும இயக்குநர் வே.அமுதவல்லி, மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் ச.வளர்மதி, எம்எல்ஏக்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், ஆ.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago