நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி கால்நடை பராமரிப்புத்துறை காலம் கடத்துவதால் 5 மருந்தகங்களுக்கு ஒரு மருத்துவர் பணிபுரியும்நிலை உள்ளது. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 152 மருத்துவ மனைகள், 2,741 மருந்தகங்கள் உட்பட 3,819 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. இங்கு மருத்துவர் காலியிடங்களில் 2019-ம் ஆண்டு ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 818 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து அதே ஆண்டு நவ.18-ம் தேதி 1,141 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தி 2020 பிப்.1-ம் தேதி முடிவுகள் வெளியிடப் பட்டன. தொடர்ந்து பிப். 5, 6-ல் கலந்தாய்வும் நடத்தப்பட்டது. ஆனால், தற்காலிக கால்நடை மருத்துவர்கள் தங்க ளைப் பணி நிரந்தரம் செய்யாமல் புதியவர்களை நியமிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
நீதிமன்றத் தடையை அடுத்து, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டோரை பணியிடங் களில் நியமிக்கவில்லை. 2 மாதங்களுக்கு முன்பு தற்காலிக மருத்துவர்களுக்கும் பணி நீட்டிப்பு செய்யாமல் அவர்களை வெளியேற்றினர். இதனால் மாநிலம் முழுவதும் 1,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக 5 மருந்தகங்களை ஒரு மருத்துவர் கவனிக்கும் நிலை உள்ளது.
வடகிழக்குப் பருவ மழைக் காலம் என்பதால் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும். ஆனால், சிகிச்சை அளிக்கப் போதிய மருத்துவர்கள் இல்லாத தால் கால்நடை வளர்ப்போர் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை வழக்கறிஞர் சரவணன் கூறியதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு 2011 ஜன.1 முதல் 2021 ஆக.31 வரை ஒதுக்கிய நிதி, இதில் மருத்துவர்களுக்காக ஒதுக்கிய தொகை போன்ற பல்வேறு கேள்விகளுக்கு ஒரு மாதத்துக்கு மேலாகியும் பதில் தரவில்லை. மருத்துவர்கள் நியமனம் குறித்த கேள்விகளுக்கு முறையான பதில் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டியே கால்நடை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப மறுக்கின்றனர். அந்த வழக்கை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மழைக் காலத்தில் தற்காலிக மருத்துவர்களையாவது பணியில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago