தமிழகத்தில் 700 கிராம ஊராட்சிகளிலும், 4 நகராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பெரம்பலூர் டிஇஎல்சி நடுநிலைப் பள்ளி மற்றும் குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று கரோனா தடுப்பூசி முகாம்களை தொடங்கிவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒதியம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் நடைபெறும் பணிகள் குறித்து வீடு வீடாகச் சென்று கேட்டறிந்தார்.
பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் 68 சதவீதம் பேர் முதல் தவணையும், 26 சதவீதம் பேர் 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தற்போது 66 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. மாநிலத்தில் 700 கிராம ஊராட்சிகளிலும், 4 நகராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா காலங்களில் பணியாற்றியவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தீபாவளிக்கு முன்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆட்சியர் வெங்கடபிரியா, எம்எல்ஏ ம.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில்...
அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், பெரிய அரண்மனைத் தெருவில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கல் ஆகியவற்றை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள், 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய 33 ஊராட்சிகளுக்கு கேடயங்கள் ஆகியவற்றை வழங்கினர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: அரியலூர் மாவட்டத்தில் 73 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி சிதைந்துபோய்விட்டது. இந்த தலைமுறை, கல்வியை காணாத தலைமுறை ஆகிவிடுமோ என்ற அச்சத்திலேயே பள்ளிகளை திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அச்சப்படாமல் குந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிகளுக்கு ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா (அரியலூர்), க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், இணை இயக்குநர்கள் சம்பத் (கொள்ளை நோய் பிரிவு), நிர்மல்சந்த் (மருத்துவக் கல்வி), சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எம்.கீதாராணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில்...
திருவாரூர் மாவட்டம் காப்பனாமங்கலம், குடவாசல், கொடிக்கால்பாளையம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டு ரூ.8.30 கோடிக்கு சுகாதாரத் துறை சார்ந்த கட்டிடங்கள் புனரமைப்புப் பணி நடைபெற உள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1.21 கோடி மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ரூ.9 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் வழங்கப்பட்டது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது, ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் உடனிருந்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago