திருச்சி மாவட்டத்தில் உற்பத்தியா கும் மலர்களைக் கொண்டு வாசனை திரவியம்(சென்ட்) உற் பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என மலர் சாகுபடி விவசாயிகள் அரசை எதிர்பார்த்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ரோஜா, மல்லிகை, முல்லை, ஜாதி முல்லை, செவ்வந்தி, அரளி, சம்மங்கி, கனகாம்பரம், விருட்சி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் ஏறத்தாழ 800 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் 700 ஹெக்டேரில் ரோஜா, மல்லிகை, முல்லை, ஜாதி முல்லை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு ஏறத்தாழ 50 ஆயிரம் டன் அளவுக்கு மலர் உற்பத்தி செய்யப்படுகிறது.
பண்டிகைக் காலங்கள் தவிர பெரும்பாலான நேரங்களில் மலர் களின் விலை மிகவும் குறைவாகவே உள்ளதால், தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து போதாவூரைச் சேர்ந்த மலர் சாகுபடி விவசாயி ஒண்டிமுத்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: மலர் பயிர்களுக்கு அதிக வெயிலும், அதிக மழையும் ஒத்து வராது. இந்த பயிர்களுக்கு அதிக அளவில் பராமரிப்பும் தேவைப்படுகிறது. மலர்களை தினந்தோறும் பறிக்க அதிக அளவில் ஆட்களும் தேவைப்படுகின்றனர். இதனால் சாகுபடி செலவு அதிகம் தான்.
பண்டிகைக் காலங்கள், முகூர்த்த நாட்கள் தவிர மற்ற நாட்களில் மலர்களின் விலை குறைவு தான். பல விவசாயிகள் வியாபாரிகளிடம் முன்பணமாக தொகை பெற்று விடுகின்றனர். இதனால், அவர்களிடம் மிகக் குறைந்த விலைக்கு மலர்களை விற் பனை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, மலர்கள் அதிகம் விளையும் அந்தநல்லூர் ஒன்றியப் பகுதியில் மலர்களைக் கொண்டு வாசனை திரவியத் தொழிற்சாலை அமைக்க வேண்டும். நியாயமான விலைக்கு விவசாயிகளிடம் மலர்களை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் விமலா கூறியது: மலர்களில் மல்லிகை, முல்லை, ஜாதி முல்லை, ரோஜா ஆகியவற்றிலிருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்க முடியும். வாசனை திரவியத் தொழிற்சாலை அமைக்க குறைந்தபட்சம் 1,000 ஹெக்டேரில் மலர் சாகுபடி நடைபெற்றால் தான் தொழிற் சாலைக்கு போதுமான அளவுக்கு பூக்கள் கிடைக்கும். இதனால், உதிரி மலர்கள் சாகுபடி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மலர் நாற்றுகளை மானியத்தில் வழங்கி ஊக்கப்படுத்தி சாகுபடி பரப்பை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
திருச்சியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைப்பதற்காக தோட்டக்கலைத்துறை சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago