குறுந்தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகள் தனியாக கவனிக்கப்பட வேண்டிய நிலை இருப்பதால், தமிழக அரசு இதற்கென பிரத்யேக அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என இந்தியத் தொழில் முனைவோர் சங்கங்களின் கூட்டமைப்பின் (சிஐஏ) ஒருங்கிணைப்பாளர் கே.இ.ரகுநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: நாட்டில் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கையால், ஏற்கெனவே பொருளாதார மந்த நிலையில் இருந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகள் ஏற்படுத்திய தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
கரோனா தொற்று பாதிப்புக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, நோய்த்தொற்று பரவலுக்கு பின் தொழில் நிறுவனங்களில் 59 சதவீதம் ஆட்குறைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். 88 சதவீத தொழில் முனைவோர் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களால் பயன்பெறாத நிலையில் உள்ளனர்.
கடந்த 18 மாதங்கள் எங்கள் தொழில் அமைப்பு சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறோம். இருப்பினும் தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளன.
தொழில் நிறுவனங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அடுத்த இரு ஆண்டுகளுக்கு கடனை திருப்பி செலுத்தத் தவறியது உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதித்தல் போன்ற எவ்வித சட்ட ரீதியிலான நடவடிக்கை யும் எடுக்கக் கூடாது. மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து தொழில் துறையினரை அரசு பாதுகாக்க வேண்டும்.
குறுந்தொழில் துறையினரின் பிரச்சினைகள் என்பது தனியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர பிரிவில் இருந்து குறுந்தொழில் தனியாக பிரிக்கப்பட சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கு தமிழக அரசு உடனடியாக குறுந்தொழில்களுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கி, அமைச்சரை நியமிக்க வேண்டும். தொழில் துறையை சார்ந்தவர்களைக் கொண்டு தனி வழிகாட்டுதல் அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோப்மா தலைவர் மணிராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago