ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு 135 நாட்களுக்கு தண்ணீர் வழங்கக்கோரி, வேட்டைக்காரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் பழைய முறைப்படி 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது 80 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க அரசாணை வந்துள்ளது. இதனால் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்காது என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பாசன நீர் வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொள்வதாக கூறி, வேட்டைக்காரன்புதூரில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறும்போது, ‘‘புதிய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு அரசு கருணை காட்ட வேண்டும். பழைய ஆயக்கட்டின் பெரியணை, பள்ளிவிளங்கால் வாய்க்கால்களின் வண்டிப்பாதைகள் பல இடங்களில் மிகவும் பழுதடைந்து உள்ளன. இதனால் அறுவடை செய்த நெல் மற்றும் தேங்காய் உள்ளிட்ட விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த சாலைகளை செப்பனிட வேண்டும் என்று பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago