கோமங்கலத்தில் சாலைவிரிவாக்கப் பணிக்காக நீரோடையின் குறுக்கே அமைக்கப்பட்ட மண்கரையால் விளைநிலங்களில் மழைவெள்ளம் தேங்கி தென்னங்கன்றுகள் சேதமடைந்தன.
பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பெய்த கனமழையால், வறண்டு கிடந்த ஓடைகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பொள்ளாச்சி – உடுமலை சாலையில் விரிவாக்க பணிக்காக நீரோடைகளின் குறுக்கே மண் கொட்டி அடைக்கப்பட்டு இருந்ததால் தென்னங்கன்றுகள், வெள்ளை சோளம், காய்கறி சாகுபடி செய்யப்பட்டு இருந்த பல ஏக்கர் விளைநிலங்களில் வெள்ள நீர் தேங்கியது.
இதுகுறித்து, கோமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி கோவர்த்தன் கூறும்போது, ‘‘பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழி அதிவிரைவு சாலை அமைக்கும் பணிக்காக தற்போது பாலங்கள் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோமங்கலம், கோலார்பட்டி பகுதிகளில் சாலையின் பக்கவாட்டு பகுதிகள் விரிவாக்கப்பட்டு சிறுபாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக கோமங்கலத்தில் உள்ள நடுப்பால ஓடையின் குறுக்கே 200 அடி நீளத்துக்கு சுமார் 5 அடி உயரத்துக்கு மண்ணை கொட்டி கரை அமைத்துள்ளனர். நேற்று முன்தினம் பெய்த பெரும் மழையால் ஓடையின் வழியாக தண்ணீர் வெளியேற வழியில்லாமல் அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்தது. இதனால் 10 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட தென்னங்கன்றுகள் நீரில் மூழ்கின. மேலும் சோளம், காய்கறி சாகுபடி செய்யப்பட்ட பல ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. தோப்பில் குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தேங்காய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. சாலை விரிவாக்கப் பணிக்காக நீரோடைகளின் குறுக்கே மண்கரைகளை அமைக்ககூடாது என பணியாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago