தமிழகம் முழுவதும் பணியாற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 20,000 தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
இதுகுறித்து, தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிற் சங்க கூட்டமைப்பின் தலைவர் வால்பாறை அமீது கூறியதாவது: கோவை மாவட்டம் வால்பாறை உள்பட தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூர் வுட் பிரையர் நிறுவனம் மற்றும் தேனி மாவட்டத்தில் வுட் பிரையருக்கு சொந்தமான ஹைவேஸ் எஸ்டேட் நிறுவன தொழிலாளர்களுக்கு 9.24 சதவீதம், வால்பாறை, கூடலூர் ஆகிய இடங்களில் உள்ள பாரி அக்ரோ நிறுவனத்தில்10 சதவீதம், வால்பாறை, நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் முடீஸ் குரூப்நிறுவனமான பாம்பே பர்மா நிறுவனத்தில் 8.50 சதவீதம், பெரிய கருமலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு 9 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல வால்பாறை, கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மழுக்கப் பாறை டாடா எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 8.50 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, கேரளா உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் சுமார் 20 ஆயிரம் தேயிலை தோட்ட தொழிலாளர் களுக்கு ரூ.15 கோடிக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போனஸ் தொகையானது தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப் பட்டுவருகிறது. அடுத்த ஆண்டு முதல் தொழிலாளர்களுக்கு கூடுதலாக போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago