கொலை வழக்கில் கைதானவர் சிறை வாசலில் தப்பியோட்டம் :

By செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி மாவட்ட கிளைச் சிறை வாசலில் தப்பியோடிய, கொலை வழக்கில் கைதானவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை வட்டம் ரங்கசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (எ) விஜி (38). இவர் மனைவி ரூபா (31). தம்பதியரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பும் தகராறு ஏற்பட்டதால் தளி அடுத்த குஞ்சுகிரிபாளையத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு ரூபா சென்று விட்டார். 2 தினங்களுக்கு முன்பு அவரை அழைத்து வர கார்த்திக் சென்றபோது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கார்த்திக் மனைவியை கொலை செய்தார். பின்னர் அவர் தளி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீஸார் தேன்கனிகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். அதன்பிறகு தருமபுரியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்க அவரை போலீஸார் அழைத்துச் சென்றனர். தருமபுரி கிளைச் சிறை வாசலில் வாகனத்தை நிறுத்தி விட்டு நுழைவு வாயில் பதிவேட்டில் போலீஸார் தகவல்கள் பதிவு செய்து கொண்டிருந்தபோது கார்த்திக் போலீஸாரை தள்ளி விட்டு தப்பியோடியுள்ளார். தப்பியோடிய கார்த்திக்கை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்