மனநலம் பாதித்த பெண் பாலியல் வன்கொடுமை - இயற்கை மரணம் அடையும் வரை முதியவருக்கு சிறை தண்டனை : கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு இயற்கை மரணம் அடையும் வரை சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பண்ருட்டி அருகே கந்தன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (59), தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் இறந்து விட்டதால், அந்த பெண் அவரது சகோதரியின் பிள்ளைகள் பராமரிப்பில் வசித்து வந்தார். மனநலம்பாதிக்கப்பட்ட பெண்ணால் பேச முடியாது, காது கேட்காது. இந்நிலையில் கடந்த 22.10.2017 அன்று உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனநலம் பாதித்த பெண்ணை தவிர மற்றவர்கள் சென்றுள்ளனர். வீட்டில் அந்த பெண் மட்டும் தனியாக இருந்ததை நோட்டமிட்ட ரங்கநாதன், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஓடியுள்ளார்.

இதையறிந்த பெண்ணின் உறவினர், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் வழக்கை விசாரணை செய்தார். ரங்கநாதன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இயற்கைமரணம் அடையும் வரை சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அபராத தொகையில் இருந்து ரூ.25 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் ரங்கநாதனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் க.செல்வப்பிரியா ஆஜரானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்