மின்வாரியத்தால் பறிபோகும் மதுரையின் பசுமை - மரங்களை காக்க புதைவழி மின்கம்பி திட்டம் செயல்படுத்தப்படுமா? :

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மின்வயர்கள் செல்லும் பாதையில் உள்ள மரங்களையும், மரக்கிளை களையும் அகற்றுவதால் மதுரை யின் பசுமை பறிபோகிறது. இதற்கு மாற்றாக புதைவழி மின்கம்பித் திட்டத்தை மின்வாரியம் செயல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த காலத்தில் அனைத்து சாலைகளின் இருபுறமும், குடியிருப்பு பகுதி களிலும் அடர்த்தியான நிழல் தரும் மரங்கள் இருந்தன. தற்போது இந்த மரங்கள் அனைத்தும், சாலை விரிவாக்கம், மேம்பாலக் கட்டுமானப் பணி காரணமாகவும், மின் பாதையில் இடையூறாக இருப்பதாகக் கூறியும் அகற்றப்படுகின்றன. மதுரையில் பசுமையாக காணப்பட்ட அழகர் கோயில் சாலை, தேனி ரோடு, சோழவந்தான் ரோடு மற்றும் நத்தம் சாலையில் தற்போது மரங்களின்றி வறட்சியான பகுதியைப்போல் காணப்படுகின்றன.

பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் மரங்களை அகற்றி வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்குப் பதிலாக வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று புதைவழி மின்கம்பித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். மதுரையில் மீனாட்சி யம்மன் கோயிலை சுற்றி அழகுப் படுத்த ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மாசி வீதிகளில் புதை வழி மின்கம்பி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தினால் மின்வயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்களை வெட்ட வேண்டாம். எனவே, புதைவழி மின்கம்பி திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஜனதா தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஐ.செல்வராஜ் கூறியதாவது: மழைக் காலத்தில் மின் வயர்கள் அறுந்து விழுவதைத் தடுக்க, சாலையோர மரக்கிளைகளை அகற்ற வேண்டியுள்ளது. மாற்று ஏற்பாடாக புதைவழி மின்கம்பித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் மாநில இணைப் பொதுசெயலாளர் ஆர்.முத்துலிங்கம் கூறியதாவது: மரங்கள் அடர்த்தியாக உள்ள சாலைகளில் புதைவழி மின்கம்பித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதனால் மழை, புயல் காலங்களில் மின்விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படாது என்றார்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதைவழி மின்கம்பித் திட்டம் பரிசோதனையாக மாசி வீதிகளில் செயல்படுத்தப்படுகிறது. அது வெற்றிகரமாக செயல்பட்டால் மற்ற வார்டுகளுக்கு அவற்றை விரிவாக்கம் செய்வதற்கான யோசனை, மதுரையின் மாஸ்டர் பிளான் திட்டத்தில் உள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்